பதிவு செய்த நாள்
29
ஜன
2023
10:01
சென்னை: பழநி தண்டாயுதபாணி கோவிலில், 48 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர், டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோவிலில், 27ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்துள்ளது. நான்கு நாட்களுக்குள், அதாவது வரும் 30 முதல், மண்டலாபிஷேகம் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி மண்டலாபிஷேகம் முடிந்தால்தான், கும்பாபிஷேகம் முழுமை பெறும். ஆகமப்படி, 48வது நாள் மண்டலாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆகம விதிகளின்படி அல்லாமல், கும்பாபிஷேகம் நடந்து நான்காவது நாளில் மண்டலாபிஷேகத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது, கோவில் சடங்குகளுக்கு எதிரானது.
கோவிலின் மத நடவடிக்கைகளில் குறுக்கிட, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை. பூஜை நடைமுறைகளை மீறினால், கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகள் பாதிக்கப்படும். தைப்பூச விழாவும் விரைவில் வருகிறது. அதற்கு முறையாக திட்டமிடாமல், தைப்பூசத்தை காரணம் காட்டி, மண்டலாபிஷேக நாட்களை குறைக்கின்றனர்; இதை ஏற்க முடியாது. மண்டலாபிஷேக சடங்குகள் முழுமையாக நடந்தால்தான், கும்பாபிஷேகம் முழுமை பெறும். 48 நாட்களை முடிக்காமல், நான்கு நாட்களில் மண்டலாபிஷேகத்தை நடத்த அனுமதித்தால், அதை மண்டலாபிஷேகமாக கருத முடியாது. எனவே, 48 நாட்களுக்கு முன், எந்த தேதியிலும் மண்டலாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும். ஆகம விதிகளின்படி, மண்டலாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, அவசர வழக்காக, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் நேற்று விசாரணைக்கு எடுத்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வள்ளியப்பன், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகினர். அறநிலையத் துறை தரப்பில், தொடர்ந்து 48 நாட்கள் 11 கலசத்தில் அபிஷேகம், 48வது நாளில் 1,008 சங்கு அபிஷேகம் செய்யப்படும். தைப்பூச விழா, தொடர்ந்து நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து, வழக்கு விசாரணையை, முதல் பெஞ்ச் முடித்து வைத்தது.