எமன் பூஜித்த எமனேஸ்வரமுடையவர் கோயிலில் புதிய கொடிமரம் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2023 05:02
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி வைகை ஆற்றின் மறு கரையில் அமைந்துள்ள, எமனேஸ்வரமுடையவர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
எமதர்மன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி மீண்டும் தன் பதவி கிடைக்க தேவர்கள் அருளிய படி, எமனேஸ்வரம் கோயிலில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து பூஜித்து மீண்டும் தன் பதவியைப் பெற்றார். இக்கோயிலில் பொன்னாள் பூண்முலை உமையாள் சமேத எமனேஸ்வரமுடையவர் அருள்பாலிக்கிறார். இங்கு கடந்த வாரம் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து ஜன., 31 மாலை 4:30 மணி தொடங்கி, அனுக்கை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம் நடந்து, முதல் கால பூஜைகள் நிறைவடைந்தது. மேலும் இன்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் காலையாக பூஜைகள் துவங்கி, கோ பூஜை நடந்து, மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் காலை 9:25 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு புதிய கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.