பதிவு செய்த நாள்
02
பிப்
2023
05:02
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், நாளை காப்புக் கட்டுதலுடன் தைப்பூசத் திருவிழா துவங்குகிறது.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பழமையான குழந்தைவேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும், இங்கு தைப்பூச தேரோட்டம், வெகு விமர்சியாக நடைபெறும். கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தைப்பூச தேர்த்திருவிட்ழா நடைபெறவில்லை. இந்நிலையில் கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா நடைபெறும் என, பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் கோவில் நிர்வாக அலுவலர்கள், தேரை சீரமைக்காததால், இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால் காரமடை சுற்றுப்பகுதியில் உன் கிராமங்களை சேர்ந்த, பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர், தைப்பூச திருவிழாவை கொண்டாட முடிவு செய்து, நோட்டீஸ் அச்சடித்து பக்தர்களுக்கு வினியோகம் செய்துள்ளது. அதில், நாளை (3ம் தேதி) காலை, 10:00 மணிக்கு காப்பு கட்டுதலும், இரவு வள்ளி மலையில் இருந்து அம்மன் அழைப்பும் நடைபெற உள்ளது. 4ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 5ம் தேதி மாலை, 6:00 மணிக்கு சப்பரத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக, குழந்தை வேலாயுத சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். 6ம் தேதி காவடி செலுத்தும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செய்து வருகிறார்.