சீர்காழி பத்திரகாளி அம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2023 04:02
மயிலாடுதுறை: சீர்காழியில் பத்திரகாளியம்மன் கோவில் பால்குட அபிஷேகம்இன்று காலை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காளிபுரம் என்ற புராண பெயர் உடைய சீர்காழியில் திரும்பும் திசையெல்லாம் காளியம்மன் கோவில்கள் இருப்பது சிறப்பு. இதில் பிடாரி தெற்கு வீதியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி உற்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு தீமிதி உற்சவம் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் நாள் உற்சவமான தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது இதனை முன்னிட்டு காலையில் அய்யனார் கோவிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலைக் கொண்டு பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு பக்தர்கள் மாவிளக்கு போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். இரவு தீமிதி உற்சவம் நடைபெற உள்ளது.