பதிவு செய்த நாள்
05
பிப்
2023
09:02
பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவில் ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநியில் ஜன.29 அன்று பெரிய நாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா துவங்கியது. தைப்பூசத்தை முன்னிட்டு வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்ட, பக்தர்கள் அதிகளவில் பழநிக்கு வருகை புரிந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், காவடியுடன் வருகை புரிந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் மலைக்கோயில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: பல கிலோமீட்டர் பாதயாத்திரை ஆக நடந்து வந்த பக்தர்கள் சண்முக நதி, இடும்பன் குளம் குளித்து அடிவாரம் கிரி வீதி பகுதிகளுக்கு வந்தவுடன் காவடி எடுத்து வந்தவர்கள் மேளதாளத்துடன் ஆண், பெண் வித்தியாசம் இன்றி காவடி பாட்டு பாடி, ஆட்டம் ஆடினர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, தீர்த்த குடம் எடுத்து வந்தனர். கிரிவீதி மற்றும் சண்முக நதி பகுதிகளில் பக்தர்கள் அன்னதானம் வழங்கினர். உணவுத்துறை அதிகாரிகள் சில இடங்களில் அன்னதானம் வழங்கிய உணவுகளை ஆய்வு செய்தனர்.
மலைக்கோயிலில் அலங்காரம்: தைப்பூசத்தை முன்னிட்டு மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் பகுதிகளில் பூக்களால் சரவணபவ என எழுதி மயில் வரைந்து இருந்தனர். பாரவேல் மண்டபம் உட்பிரகாரம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஒரு வழிப் பாதை: பழநி பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு வழி பாதையாக பக்தர்கள் திருஆவினன்குடி கோயிலில் இருந்து சன்னதி வீதி, பாத விநாயகர் கோயில், வடக்கு கிரி விதி, குடமுழுக்கு நினைவரங்கு மண்டபம் வழியே யானை பாதை அடைந்து மலைக்கோயில் சென்றனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்புடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் மலைக்கோயில் அனுப்பினர்.
மலைக்கோயிலில் இருந்து படிப்பாதை வழியாக பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டு, பாத விநாயகர் கோயில் மற்றும் அய்யம்பள்ளி ரோடு வழியே பஸ் ஸ்டாண்ட் செல்ல போலீசார் அனுமதித்தனர். பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மருத்துவ வசதி: சுகாதார துறை சார்பில் மலைக்கோயில் திருவீதி மற்றும் பழநியை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கிரிவீதி பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு உடல்நலவு குறைவு ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆக்ரமிப்பு: பூங்கா ரோடு, சன்னதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, ஆகிய பகுதிகளில் கடைக்காரர்கள், தட்டு கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்தது. இதனால் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் அலகு குத்தி வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
போக்குவரத்து அவதி: பழநியில் தற்காலிக பேருந்து நிலையம் புது தாராபுரம் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டது. ஆனால் பேருந்துகள் அங்கு கொண்டு செல்லப்படவில்லை. தற்காலிக பேருந்து நிலைய செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் பேருந்துகளை பழநி மத்திய பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக அளவில் பெற்று பயண சீட்டு வழங்கப்பட்டது. திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் செல்லும் பேருந்துகள் வழியில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பக்தர்களை பேருந்து ஏற்ற தயங்கினர். மேலும் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பிறகு இன்னும் வழியில் உள்ள ஊர்களில் பக்தர்கள் நின்ற படி செல்ல ஏற்றப்பட்டனர். இதனால் பாதயாத்திரை வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
வெளிநாட்டு பக்தர்கள்: தைப்பூசத்தைக் காண வெளிநாட்டில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர் அவர்கள் காவடி எடுத்த, அலகு குத்தி வந்த பக்தர்களை புகைப்படம் எடுத்த எடுத்துச் சென்றனர். அவர்களில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ப்லிப் கூறுகையில், " எனது மனைவியுடன் இங்கு வந்துள்ளேன். தைப்பூச விழாவை காண மகிழ்ச்சியாக உள்ளது. ஆன்மீகப் பகுதிகளை கண்டு வருகிறேன். என்னுடன் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நபரும் வந்துள்ளார்." என்றார். பாதயாத்திரை பக்தை, கீதா கோகுலம், குளத்தூர், கோவை, கூறுகையில், "ஜன.1, முதல் பாதயாத்திரை துவங்கி இன்று மலைக்கோயில் வந்து சேர்ந்துள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மலைக்கோயில் முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன." என்றார்.