பதிவு செய்த நாள்
06
பிப்
2023
04:02
தியாகதுருகம்: ஈய்யனுர் கிராமத்தில் 8ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தியாகதுருகம் அடுத்த ஈய்யனூர் கிராமத்தில் சேலம் ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்களான விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்வெங்கடேசன், டாக்டர் பொன்னம்பலம், ஜீவநாராயணன் மற்றும் சமூக ஆர்வலர் ஆத்தூர் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள காளி கோயிலில் இருந்த 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பத்தை கண்டுபிடித்தனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்டு இருந்த இச் சிற்பத்தை மக்கள் மீட்டெடுத்து தற்போது வழிபாட்டில் வைத்துள்ளனர். பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள இது 120 செ.மீ., உயரம், 105 செ.மீ., அகலம், 10 செ.மீ., தடிமன் கொண்டதாக உள்ளது.
தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பனை ஓலை, கழுத்தில் சவடி, சரபளி அணிகலன்களும் பின்புறம் சூலாயுதம் உள்ளது. இடதுபுறம் கலைமான் வாகனமாக 8 கரங்களுடன் கொற்றவை சிற்பம் காட்சியளிக்கிறார். இடது பின் கரங்களில் சங்கு, வில் கேடயமும், இடது முன் கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. வலது பின் கரங்களில் எரிநிலைச் சக்கரம், வாள், மணி காட்டப்பட்டுள்ளது. வலது முன் கரம் அபயமுத்திரையில் உள்ளது. வலது கை அருகே கிளியும், இடது புறம் சிங்கமும் காணப்படுகின்றது. யானையின் தோலை இடுப்பில் கட்டி அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்து உள்ளார். கொற்றவையின் கால் அருகே நவகண்ட வீரன் உள்ளார். காலடியில் எருமையின் தலை காட்டுப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த நிலையில் இந்த சிற்பம் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.