பதிவு செய்த நாள்
06
பிப்
2023
04:02
வேடசந்தூர்: வேடசந்தூர் கோட்டூரில், ஊர் செழித்து மக்கள் நலமுடன் வாழும் வகையில், சிறுமியை நிலா பெண்ணாக அதாவது நிலவுக்கு மனைவியாக பாவித்து கிராம மக்கள் தொடர்ந்து கொண்டாடி வரும் வினோத வழிபாட்டு திருவிழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா குட்டம் ஊராட்சியில் உள்ளது கோட்டூர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு நிலா பெண் வழிபாடு நடத்தப்படுகிறது. அதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே, அங்குள்ள மா சச்சியம்மன் கோயிலில், ஊர் மக்கள் ஒன்று கூடி, பத்து வயதுக்கு உட்பட்ட ஓர் சிறுமியை தேர்வு செய்கின்றனர். தற்போது கோட்டூரை சேர்ந்த கார்த்திகேயன் மேகலா - தம்பதியரின் மகள் சர்வ அதிர்ஷ்டா 10, தேர்வு செய்யப்பட்டார். இவர், தாடிக்கொம்பு குருமுகி பள்ளியில் 5 -ம் வகுப்பு படித்து வருகிறார். (மேகலா வேடசந்தூர் பேரூராட்சியின் தலைவராக தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது). தேர்வு செய்யப்படும் சிறுமிக்கு, அந்த ஊரில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து, பால், பழம், சத்தான உணவு வகைகள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து கோவிலில் வைத்து வழங்குவர். மற்ற சிறு குழந்தைகளுக்கும் வழங்குவார். இவ்வாறு தேர்வு செய்யப்படும் சிறுமியை, தைப்பூச நாளன்று, மா சடச்சியம்மன் கோயிலில் இருந்து, தாய்மாமன்கள் பச்சை பந்தல் கட்டி அமர வைத்து இருப்பர். பிறகு அங்கிருந்து ஊர் மக்கள் ஒன்று கூடி, இரவு 9:00 மணிக்கு மேல் ஊருக்கும் மேற்கே உள்ள சரளைமேடு பகுதிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வர். சரளை மேட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு, ஆவாரம் பூவால் மாலையிட்டு, ஆவாரம் பூவால் அலங்காரம் செய்து, கூடை நிறைய ஆவாரம் பூவை பறித்து போட்டு சுமக்கச் செய்து மீண்டும் ஊரை நோக்கி அழைத்து வந்து, மாரியம்மன் கோவில் முன்பு அமர வைப்பர். அங்கு அந்த சிறுமியை அமர வைத்து இரவு முழுவதும் பெண்கள் கும்மி அடித்து பாட்டு பாடி வழிபடுவர். அனைவருக்கும் பொங்கல் வைத்து வழங்குவர். பிறகு பெண்கள் குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆவாரம்பூ உள்ள கூடையில் எண்ணெய் நிறைந்த தீப சட்டியை வைத்து தீபமேற்றி வணங்குவர். அந்த ஆவாரம்பூ கூடையை அப்படியே எடுத்து, நிலா பெண்ணை சுமக்கச் செய்து, நீர் நிறைந்த கிணற்றில் அப்படியே மிதக்க விட்டனர். பிறகு அனைவரும் குலவை சத்தமிட்டு வணங்கி வீடு திரும்பினர். ஒரு நாள் இரவு முழுவதும் நடந்த இந்த திருவிழா, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பகுதி மக்களும் மகிழ்ச்சி கடலில் கண்டு களித்தனர்.