பதிவு செய்த நாள்
06
பிப்
2023
04:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் மற்றும் இளையனார் வேலுார் முருகன் கோவில்களில் நேற்று தைப் பூசம் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் முருகன் கோவிலில் நேற்று தைப்பூசம் விழாவை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வரும் நாள் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.இதனால் அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். நேற்று குமரகோட்டம் முருகன் கோவிலில் காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கூட்டம் அதிகமானதால் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பலர் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதேபோல காஞ்சிபுரம் அடுத்த இளையனார் வேலுார் கோவிலில் தை பூசத்தை முன்னிட்டு, பாலசுப்பிரமணியர் நேற்று முன்தினம் காலை, 4:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ்புத்துார், மேல்புத்துார், ஆசூர், குளத்துார், நெல்வேலி, கீழ்பேரமநல்லுார் ஆகிய கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு நெல்வேலி கிராமத்தில், சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. பின் அங்கிருந்து புறப்பட்டு, நேற்று காலை 5: 00 மணிக்கு சுவாமி கோவிலை சென்றடைந்தார். lகாஞ்சிபுரம், செவிலிமேடு, ஜெம் நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. தைப்பூசத்தையொட்டி இக்கோவில் வளாகத்தில் தனி சன்னிதியில் உள்ள சுப்பிரமணியருக்கு நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு, 13 அடி உயரமுள்ள பத்துமலை முருகபெருமானுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. பவுர்ணமியையொட்டி, மாலை 6.00 மணிக்கு அபிராமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. விழாவில், செவிலிமேடு மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னதான பூஜை: சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர், வி.என்.பெருமாள் தெருவில், 21வது ஆண்டு தைப்பூச அன்னதான பூஜை நேற்று காலை 7:00 மணிக்கு மங்கல இசையுடன் துவங்கியது. தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கலைஞர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்ற பக்திப்பாடல்கள் நிகழ்ச்சியும், 11:45 மணிக்கு தீபஜோதி தரிசனமும் நடந்தது. இதில், வி.என்.பெருமாள் தெரு, கே.எம்.வி., நகர், வரதராஜபுரம் தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.