வடமதுரை: பழநி மலை முருகன் கோயிலில் தைப்பூச விழா முடிந்தபோதிலும், அய்யலூர் வழியே பாதயாத்திரையாக செல்வோர் எண்ணிக்கை குறைவின்றி காணப்படுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு டிசம்பர் 2வது வாரத்தில் இருந்தே பக்தர்கள் குழுக்களாக பழநிக்கு பாதயாத்திரை வர துவங்கினர். கடந்த ஜன.27 ல் கும்பாபிஷேகம், பிப்.5ல் தைப்பூசம் நடந்தது. முக்கிய விழாக்கள் முடிந்தாலும் பழநி நோக்கி பாதயாத்திரை செல்வோர் எண்ணிக்கை குறையாமல் காணப்படுகிறது. தற்போது அதிகாலை நேரத்தில் அதிகளவில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டாலும் 4 வயது குழந்தைகளும் பாதயாத்திரையில் பங்கேற்று செல்வதை காண முடிகிறது. மணப்பாறை பக்தர் சாந்தி கூறுகையில், எல்லோரும் ஒரே நேரத்தில் பழநி சென்றடைந்தால் கூட்ட நெரிசலில் சிக்க நேரிடும். இதை தவிர்க்கவே விழா முடிந்த பின்னர் பாதயாத்திரை செல்கிறோம். எங்களை போன்று நேர்த்திக்கடன் செலுத்துவோர் சித்திரை மாதம் வரையிலும் பாதயாத்திரை செல்வர்’ என்றார்.