பதிவு செய்த நாள்
08
பிப்
2023
05:02
அன்னூர்: ஜோதி வடிவில் இறைவனை கண்டவர் வள்ளலார், என தைப்பூச விழா கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. கோவை சோதி மைய அறக்கட்டளை மற்றும் கோவில்பாளையம், கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், வள்ளலார் தைப்பூச விழா கருத்தரங்கம், நல்ல கவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரத்தில் நேற்று முன்தினம் நடந்தது, அறக்கட்டளை பொருளாளர் வானதி, வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்தார். குருஜி சிவாத்மா வழிபாட்டை துவங்கி வைத்து பேசுகையில், "தவறுகளை திருத்திக் கொண்டு முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. ஒரு வேளை உணவாவது மற்றவர்களுக்கு வழங்கி வாழ்தலே மனித வாழ்வின் மகத்துவம். அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே இறையருள்," என்றார்.
உதவி பேராசிரியர் கணேசன் பேசுகையில், "உணவு வழங்குவது சோம்பேறி ஆக்குவதற்கு அல்ல. ஜீவகாருண்யம் பெறுவதற்கே என வள்ளலார் வலியுறுத்தினார். தீப ஒளியில் இறைவனை கண்டவர் வள்ளலார்," என்றார். அறக்கட்டளை செயலாளர் பால் கண்ணன் பேசுகையில், "வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றுவதே பேரின்பத்தை அடையும் வழி," என்றார். புலவர் புவனா ஜீவானந்தம், தன்னை அறிதலே என்ற தலைப்பிலும், முனியாண்டி, ஜீவகாருண்யமே என்ற தலைப்பிலும், கவிதா செந்தில்குமார் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்னும் தலைப்பிலும் பேசினர். அறக்கட்டளை தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், வள்ளலார் காட்டிய சன்மார்க்க நெறி என்னும் தலைப்பில் பேசினார். விழாவில், சான்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.