பதிவு செய்த நாள்
08
பிப்
2023
05:02
சூலூர்: சூலூரில் பழமையான வேங்கடநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது.
சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பெரிய குளக்கரையில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத திரு வேங்கடநாத பெருமாள் கோவில், 1000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. மிகப்பழமையான இக்கோவிலில், விமானத்துக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேக விழா துவங்கியது. பகவத் பிராத்தனை, புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தி பூஜை முடிந்து, முதல் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு காப்பு கட்டுதல், யாகசாலை பிரவேசம், கும்ப திருவாராதனம் மற்றும் இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு வேதபாராயணம், மூன்றாம் கால ஹோமம் நடந்தது. நாளை இரு கால ஹோமங்கள், மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. நாளை மறுநாள் காலை, 6:00 மணிக்கு, ஆறாம் கால ஹோமம் துவங்குகிறது. 8:00 மணிக்கு யாத்ரா தானம் நடக்கிறது. 10:00 மணிக்கு விமானம் மற்றும் பரிவாரங்கள், ஸ்ரீ தேவி பூதேவி சமேத திரு வேங்கடநாத பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. தாச பளஞ்சிக சமூக, சூலூர் திருவேங்கடநாத பெருமாள் குல தெய்வ வழிபாட்டு குழுவினர், புதூரார் மருதாசல தேவர் திருத்தேர் அறக்கட்டளையினர், அன்னதான கமிட்டி, மார்கழி கமிட்டியினர் மற்றும் பகத்ர்கள் பங்கேற்றனர்.