பதிவு செய்த நாள்
10
பிப்
2023
11:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் கூரத்தாழ்வானின் 1,013வது திருவவதார மஹோத்ஸவம் கடந்த 1ல், திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடு உற்சவத்துடன் துவங்கியது.
தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு சிம்மம், யாளி, மங்களகிரி, கமலாசனத்தொட்டி, சூரிய பிரபை, குதிரை, சந்திர பிரபை, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். திருவவதார உற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், நேற்று காலை 8:00 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். விழாவில் கூரம், காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், பெங்களூரூ உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை திருப்பல்லக்கு, மூலவர் திருமஞ்சனம், மாலை தோளுக்கினியான் சாற்றுமறை உற்சவம் நடக்கிறது.