பதிவு செய்த நாள்
10
பிப்
2023
01:02
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி அம்பலபாடி பழங்குடியின கிராமத்தில், மறைந்த முன்னோர்களுக்கு பூஜை செய்யும் அடியாந்திரம் நிகழ்ச்சி மக்களிடையே களை கட்டியது.
நீலகிரியில் வாழும் பனியர் சமுதாய மக்கள், மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சியை பிப்ரவரி மாதத்தில் செய்கின்றனர். வயநாடன் செட்டி சமுதாய அம்மன் கோவில் திருவிழா பிப்., மாதத்தில் துவங்கும் நிலையில், அதில் பழங்குடியின மக்களும் பங்கேற்பதுடன், இவர்கள் சமுதாய சிறப்பு பூஜைகளும் செய்யப்படும். இதற்காக பிப்., இரண்டாவது வாரத்தில் பனியர் சமுதாய மக்கள் மறைந்த முன்னோர்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். தொடர்ந்து 5 நாட்கள் பகல், இரவு என தொடர்ச்சியாக பூஜைகள் செய்து, கலாச்சார நடனமாடி அன்னதானம் வழங்கப்படும். மேலும் தங்கள் குடும்பங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அந்த குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் செய்வதுடன் மூத்தவர்களிடம் ஆசி பெறுவார்கள். பின்னர் மறைந்தவர்களுக்கு இரவு கால பூஜைகள் செய்து, மறுநாள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தங்கள் நிகழ்ச்சியை நிறைவு செய்கின்றனர். இதில் அனைத்து கிராம பனியர் சமுதாய பழங்குடியின மக்களும், தங்கள் குடும்பங்களுடன் பங்கேற்பதுடன், கலாச்சார நடனம் மூலம் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அடியாந்திரம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனைத்து தரப்பு மக்களும் வந்திருந்தனர்.