குனியமுத்தூர்: கோவைபுதூர் செல்லும் வழியில் குளத்துப்பாளையத்தில், நூற்றாண்டுகள் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 7ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து அம்மன் அழைப்பு, ஆபரணம் எடுத்தலும் நள்ளிரவு சக்தி கரகம் எடுத்தலும் நடந்தன. நேற்று காலை வினாயகர் கோவிலிலிருந்து, வீட்டின் நலனுக்காக நவதானியங்களை கொண்டு உருவாக்கப்பட்ட முளைப்பாரியுடன், பெண் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று, செங்குளத்தில் முளைப்பாரியை போட்டனர். மாலையில் அம்மன் ஊர்வலம், தரிசனம், மஞ்சள் நீராட்டு ஆகியவை நடந்தன. இரவு அபிஷேக ஆராதனையுடன் விழா நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மறு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.