மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தை அருகே உள்ள நிரதலமுடைய அய்யனார் சோணையா சுவாமி கோயில் பொங்கல் பூஜை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் சங்கம்,விஸ்வகர்மா இளைஞர் பேரவை ஆகியவற்றின் சார்பில் வருடந்தோறும் தை மாதம் அய்யனார் சோணையா சுவாமி கோயிலில் பொங்கல் பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இன்று பொங்கல் பூஜை விழாவையொட்டி சங்கத்தினர் விநாயகர் கோயிலில் இருந்து பூஜை பெட்டிகளை ஊர்வலமாக கோயிலுக்கு தூக்கி சென்றனர்.இதையடுத்து சோணையா சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ஏராளமானோர் பொங்கல் வைத்தும் சுவாமியை வழிபட்டனர். விழாவில் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் சங்கம், விஸ்வகர்மா இளைஞர் பேரவை நிர்வாகிகள் மற்றும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.