ராமேஸ்வரம் கோயில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2023 09:02
ராமேஸ்வரம், மாசி மகா சிவராத்திரி விழா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற விழாவின்போது அலுவலகத்தில் இருந்தும் துணை ஆணையர் மாரியப்பன் பங்கேற்காமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் கோயிலில் முக்கிய விழாவாக மாசி மகா சிவராத்திரி, ஆடி திருக்கல்யாண விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சிவராத்திரி விழா துவக்கமாக நேற்று கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தங்க கொடி கம்பத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க கோயில் குருக்கள் கொடி ஏற்றினார்.அபிேஷகத்திற்கு பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிப்.18 மகா சிவராத்திரி விழாவும், பிப்.19ல் மாசி தேரோட்டம், பிப்.20ல் மாசி அமாவாசை விமரிசையாக நடக்கிறது.
என்ன நடக்கிறது: ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றப்படும் நந்தி மண்டப கூரை, தூண்களில் சுண்ணாம்பு கலந்த வர்ணம் பூசுவது வழக்கம். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக நந்தி மண்டபம் பராமரிப்பின்றி, வர்ணம் பூசாமல் கூரை, தூண்களில் சுண்ணாம்பு வர்ணம் கலவை பெயர்ந்து அலங்கோலமாக இருந்தது. இதற்கு ரூ.2000 முதல் 3000 வரை தான் செலவாகும். ஆனால் இதை கூட செய்ய கோயில் அதிகாரி முன்வராதது பக்தர்களிடம் வேதனை ஏற்படுத்தியது. நேற்று விழா கொடியேற்றிய போது கோயில் துணை ஆணையர் மாரியப்பன் அலுவலகத்தில் இருந்து கொண்டே வராமல் புறக்கணித்தார். கோயில் ஊழியர்கள் அழைத்தும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.