பதிவு செய்த நாள்
13
பிப்
2023
12:02
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், விரைவில் தரிசனம் செய்ய, 400 ரூபாய்க்கு, போட்டோ அல்லது புத்தகம், அல்லது காலண்டர் வாங்குமாறு, கோவில் நிர்வாகம் அடாவடி வசூலில் ஈடுபட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர். விரைவு தரிசன கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாளில் சமீபமாக கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சாதாரண பக்தர்களும், விரைவு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்தை நாடுகின்றனர். இதனால் அவர்களிடம் விரைவில் தரிசனம் செய்ய, சில புரோக்கர்கள் வசூலில் ஈடுபடுகின்றனர். இதை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம், தல வரலாறு, 10 புத்தகம் கொண்ட பேக்கிங் அல்லது நான்கு போட்டோ கொண்ட ஒரு பேக்கிங் அல்லது நான்கு கோவில் காலண்டர், இதில் ஏதாவது ஒன்று வாங்கினால், ஐந்து அல்லது ஆறு பேர், வைகுண்ட வாயில் வழியாக விரைவு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக கூறி வசூலில் ஈடுபட்டுள்ளதாக, பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.