பதிவு செய்த நாள்
16
பிப்
2023
06:02
பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில் உள்ள தொண்மையான கோவில்கள் பலவற்றில், திருப்பணி மேற்கொள்ளப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பல்லடம் வட்டாரத்தில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள், ஆகம விதிகளை மீறி பல ஆண்டுகளாக திருப்பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. கடைவீதி மாகாளியம்மன் கோவில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாகும். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், இக்கோவில் புனரமைக்க திட்டமிடப்பட்டது. திருப்பணி குழு அமைக்கப்பட்டு, புனரமைப்பு பணிகளை பக்தர்கள் மேற்கொண்டனர். கோர்ட் உத்தரவை தொடர்ந்து கோவில் திருப்பணி பாதியில் கைவிடப்பட்டது. இதேபோல், அருளானந்த ஈஸ்வரர், பொங்காளியம்மன், விநாயகர் பாலதண்டாயுதபாணி, காரணப்பெருமாள், கிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில்,. மற்றும் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளன.
பக்தர்கள் கூறுகையில், பல்லடத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள், சோழர்கள், பாண்டியர்கள் காலத்தை சேர்ந்தவை. பழமையான இக்கோவில்கள் ஆகம விதிமுறைப்படி திருப்பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இக்கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். போதிய பராமரிப்பு பணிகளும் இல்லாததால், பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, பழமையான கோவில்களை பாதுகாத்து திருப்பணி செய்ய அறநிலையத்துறை முன் வர வேண்டும் என்றனர்.