பதிவு செய்த நாள்
17
பிப்
2023
08:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் நாளை மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி பல்வேறு சிவன் கோவில்களில் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.
காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள சிகண்டீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரியையொட்டி, நாளை, மாலை 6:00 மணி முதல் கால பூஜை, இரவு 10:00 மணிக்கு இரண்டாவது கால பூஜை, நள்ளிரவு 2:00 மணி மூன்றாவது கால பூஜை, நாளை மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் கோடி ருத்ரர்கள் வழிபட்ட ருத்ரகோட்டீஸ்வரர் கோவிலிலும், நான்கு கால பூஜை சிறப்பு பூஜை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலை, லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், நான்கு கால பூஜை மற்றும் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடக்கிறது.
காஞ்சிபுரம் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், திரிமூர்த்தி சிவ ஜெயந்தி என அழைக்கப்படும் மஹா சிவராத்திரியை விழாவையொட்டி, காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, ஜெம் நகர், டி.எஸ்.பி., திருமண மண்டத்தில், நாளை காலை 9:00 மணி முதல், இரவு முழுதும் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம் நடக்கிறது.
ஈஷா மையம் சார்பில், காஞ்சிபுரம், காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் மஹா சிவராத்திரி ஈசனுடன் ஓர் தெய்வீக இரவு நிகழ்ச்சி, நாளை, மாலை 6:00 மணி முதல், மறுநாள், காலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. இதில், புகழ் பெற்ற கலைஞர்களின் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நாட்டியத் திருவிழாவும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.