பதிவு செய்த நாள்
17
பிப்
2023
06:02
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நாளை பிரம்மாண்டமாக நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில், சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
கோவை ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் ஈஷா மஹா சிவராத்திரி விழா, ஆதியோகி முன் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்தாண்டு, ஈஷா மஹா சிவராத்திரி விழா, நாளை மாலை, 6:00 முதல் 19ம் தேதி காலை, 6:00 மணி வரை நடக்கிறது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெறும் விழாவில், சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின், இவ்விழாவிற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதல்முறையாக தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையையொட்டி, இன்று பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது.
ஈஷா யோகா மையத்தில், நாளை மாலை, 6:00 மணிக்கு, தியான லிங்கத்தில் நடைபெறும் பஞ்சபூத க்ரியையுடன், மஹா சிவராத்திரி விழா துவங்குகிறது. அதனைத்தொடர்ந்து, லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை நடைபெறும். அதன்பின், விழா மேடையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறுகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், சத்குரு வழிநடத்தும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளும், சத்சங்கமும் நடக்கிறது. இவ்விழாவில் குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப்புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரிகுமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று, இரவு முழுவதும் பக்தர்களை விழிப்புணர்வாகவும் விழிப்பாகவும், வைத்துக் கொள்ள உள்ளனர். இவ்விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, இரவு முழுவதும் மகா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.