பதிவு செய்த நாள்
18
பிப்
2023
10:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிபெருந்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் ரத ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.
இக்கோயில் மாசி பெருந்திரு விழா முகூர்த்தகால் நடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பூத்தமலர் அலங்காரத்தில் அம்மன் வீற்றிருக்க திருவிழா துவங்கியது . இதை தொடர்ந்து நேற்று பூச்சொரிதல் ரத ஊர்வலம் நடந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாரியம்மன்,விநாயகர், முருகன், ஐயப்பன், சிவன், பார்வதி வீற்றிருக்க காலை 11:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கோயில் வளாகத்திலிருந்து ரத ஊர்வலம் துவங்கியது. மேளதாளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தபடி வந்தனர். வழி நெடுகிலும் குவிந்த பக்தர்கள் பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். மேற்குரதவீதி,கலைக்கோட்டு விநாயகர் கோயில்,பென்சனர் தெரு,கோபால சமுத்திரம் தெரு,கிழக்குரதவீதி,தெற்குரதவீதி, பழநிரோடு வழியாக ரத ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பூ அலங்காரம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பூ பிரசாதமாக வழங்கப்பட்டது. முக்கிய ரோடுகளில் போக்கு வரத்து திருப்பிவிடப்பட்டது. 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவ்விழாவை தொடர்ந்து பிப்.21ல் கொடியேற்றம்,மார்ச் 3ல் தேரோட்டம் , பூக்குழி இறங்குதல், மார்ச் 4ல் தசாவதார விழா , மார்ச் 7 ல் தெப்ப திருவிழா நடக்கிறது.