30 ஆண்டுகளுக்கு பின் ஒலித்த புஷ்பவனேஸ்வரர் கோயில் மணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2023 10:02
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மணி ஒலிக்க தொடங்கியிருப்பது பக்தர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் , இந்துக்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கிய பின் புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இரும்பை தங்கமாக மாற்றிய திருவிளையாடல் நடந்த ஸ்தலம், அப்பர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் பாடல் பாடிய ஸ்தலமான இங்கு பூஜை நேரத்தில் 500 கிலோ எடை கொண்ட வெண்கல மணி ஓலிப்பது வழக்கம். தினசரி காலை, மதியம், மாலை, இரவு என நான்கு கால பூஜையின் போது மணி ஒலிக்கப்படும். ராட்சத கட்டத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள இந்த மணியை கீழேயிருந்து இரும்பு சங்கிலி மூலம் ஒரு முறை இழுத்தால் எட்டு தடவை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயில் மணியில் பேரிங் பழுதானதால் கடந்த 30 ஆண்டுகளாக மணி ஒலிக்கவேயில்லை. மதுரையை சேர்ந்த பக்தர் ஒருவர் மணியை பழுது பார்த்து மீண்டும் ஒலிக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். தற்போது தினசரிபூஜை நேரத்தின் போது மணி ஒலிப்பது பக்தர்களை பரவசமடைய செய்துள்ளது. விரைவில் பங்குனி திருவிழா நடைபெற உள்ள நிலையில் மணி ஒலிக்க தொடங்கியிருப்பது பக்தர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.