பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தேர், தீமிதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2023 07:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரௌபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர், தீமிதி விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை பரனூர் குளக்கரையில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. சிறப்பு வழிபாட்டிற்கு பிறகு திரௌபதி அம்மன் சமேத அர்ஜுனன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கரகத்துடன் ஏழு ஊர்களில் வீதிஉலா வந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடிக்க தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து கரகம் தீக்குண்டத்தில் இறங்கியது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.