பதிவு செய்த நாள்
20
பிப்
2023
07:02
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு சிவாலயங்களில் மகா சிவராத்திரியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் நான்கு கால வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை, 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச வழிபாடுகள் நடந்தன. இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சனிக்கிழமை காலை தீர்த்த குடங்கள் அடங்கிய புனித நீரால் சிவனுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இரவு, 6:00 மணி முதல் தொடர்ந்து நான்கு கால பூஜைகளும், இரவு,1:00 மணி அளவில் சோடாஷ அபிஷேகமும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகா தீபாராதனையும் நடந்தன. இரவு முழுவதும் அகண்ட பஜனை, சிவபுராணம் ஓதுதல் நடந்தன. நடராஜர் கனக சபையிலும், அம்பாள் சமேத சொக்கலிங்கேஸ்வரர் காளை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கண்விழித்து காத்திருந்து, சிவபெருமானை தரிசித்தனர். இதேபோல இடிகரை வில்லீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில், ஜோதிபுரம் அய்யாசாமி திருக்கோவில், வீரபாண்டி, செல்வபுரத்தில் உள்ள தன்னாசியப்பர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.