பதிவு செய்த நாள்
20
பிப்
2023
03:02
பேரூர்: பேரூர் அங்காளம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உப கோவிலாக பேரூர் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி உற்சவம் கொண்டாடப்படும். இந்தாண்டு மஹா சிவராத்திரி உற்சவம், கடந்த, 16ம் தேதி, கொடி கட்டுடன் துவங்கியது. நேற்று இரவு அக்னி குண்டம் வளர்த்தல் பூஜை நடந்தது. மாசி அமாவாசையொட்டி, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, குண்டம் இறங்குதல் நடந்தது. இன்று காலை, ஆற்றங்கரையில் இருந்து அக்னி கரகம், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து, குண்டத்தில், அக்னி பூ உருட்டி விடப்பட்டது. அதன்பின், கோவில் பூசாரி முதலாவதாக குண்டம் இறங்கினார். தொடர்ந்து, கரகம் எடுத்தவர்கள், விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் என, ஏராளமானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு, அம்மனுக்கு அக்னி அபிஷேகம் நடந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.