மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2023 04:02
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி சிவராத்திரி மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலைத்துறைக்கு உட்பட்ட பழமையான மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதும் இல்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குலதெய்வமாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இன்று அமாவாசையில் தமிழகத்தில் பல ஊர்களில் இருந்து குலதெய்வம் வழிபாடு செய்த பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
மஞ்சளாற்றில் கூட்டம் அதிகரிப்பு: பிப்.18 ல் திருவிழா கோலாகலமாக துவங்கியது. இன்று மூன்றாம் நாள் திருவிழா, அமாவாசை என்பதால் அதிகாலை 4:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் மஞ்சளாற்றில் குளித்துவிட்டு அம்மனை தரிசித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். தினமலர் செய்தி எதிரொலியாக மஞ்சளாற்றில் பெண்களுக்கு ஆடை மாற்றும் வசதி செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் வேலுச்சாமி செய்து வருகிறார்.