திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் மஹா சிவராத்திரி விழாவில், லிங்கோத்பவருக்கு நள்ளிரவு சிறப்பு அபிஷேகத்தில், ஆண்டுக்கொரு முறை மட்டும் தாழம்பூ வைத்து நடத்தப்படும் சிறப்பு பூஜை நடந்தது.
பிரம்மா, விஷ்ணுவுக்கு இடையே யார் பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதிப்பிழம்பாக, லிங்கோத்பவ வடிவாக, அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்த தலமே திருவண்ணாமலை. அந்த நாளே மஹா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை, 6:00 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக இரண்டாம் கால பூஜை நள்ளிரவு, 12:00 மணிக்கு நடந்தது. இதில் மூல கருவறை பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின் சிறப்பு அலங்காரம் செய்து, ஆண்டுக்கொரு முறை மட்டும் தாழம்பூ வைத்து நடத்தப்படும் சிறப்பு பூஜை நடந்தது. மஹா சிவராத்திரியையொட்டி, கோவில் வளாகத்தில் பக்தர்கள் விடிய விடிய வழிபட்டனர். அறநிலையத்துறை சார்பில் நடப்பாண்டு முதன் முறையாக, ஈசான்ய மைதானத்தில், பல்வேறு ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடந்தன.