பதிவு செய்த நாள்
21
பிப்
2023
05:02
சென்னை : தேவர்கள், சித்தர்கள் பேசிய மொழி தமிழ் என, புராணங்கள், வரலாறுகள், காவியங்கள், கருத்தோவியங்கள் நிரூபித்துள்ளன, என, சென்னை உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்தார். சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மையம் சார்பில், சர்வதேச தாய்மொழி தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை துவக்கி வைத்து, சென்னை உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் பேசியதாவது: மொழி என்பது புரிய வேண்டும். தமிழ் மிகச் சிறந்த மொழி. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விஞ்ஞானத்திலும், எந்த ஞானத்திலும் சிறந்த மொழியாக இருந்து வருகிறது. உலகிலுள்ள எத்தனையோ மொழிகளை பேசி கற்றிருந்தாலும், தாய்மொழிக்கு ஈடு, இணை கிடையாது. பிற மொழிகளை பேசி சுகம் கண்டு, தாய்மொழியை மறந்து தவிக்கிறோம்.
தாய்மொழியின் பெருமையை உணர்ந்து, தினமும் ஒரு முறையாவது பேச வேண்டும் என்பதற்காகவே, இந்த சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. தேவர்கள், சித்தர்கள் பேசிய மொழி தமிழ் என, புராணங்கள், வரலாறுகள், காவியங்கள், கருத்தோவியங்கள் நிரூபித்துள்ளன. கல் தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய மூத்த மொழி தமிழ். ஒவ்வொரு துறைகளிலும் பலரால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் தமிழர்களால் முன்பே சொல்லப்பட்டுள்ளன. டிஜிட்டல் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழ் இதிகாசங்களில் அப்போதே சொல்லப்பட்டுள்ளது. உலகில் எந்த மொழி மாறினாலும், எண்கள் மட்டும் ஒன்று முதல், ஒன்பது வரை மாறவில்லை. ராமானுஜம் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தார். எனவே, டிஜிட்டல் பிறந்தது அவ்வை மற்றும் அவரது முன்னோர் காலத்தில் தான். இதே போல, மகப்பேறு மருத்துவம், அறிவியல், உலகம் உருண்டை என பல்வேறு விஷயங்களை கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், சி.ஐ.எஸ்.ஆர்., -- எஸ்.இ. ஆர்.சி., இயக்குனர் ஆந்தவல்லி, தலைமை விஞ்ஞானிகள் பாரிவள்ளல், ராஜாசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.