தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்தின் கீழ் சிறகிழிநாதர் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா தேரோட்டத்தில் வடம் பிடிப்பதில் இரு தரப்பாரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பேச்சு வார்த்தைக்குப் பின் ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் சில ஆண்டுகள் தேரோட்டம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தேரில் பழுது ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் பரிந்துரையில் இந்து அறநிலையத்துறை சார்பில் புதிய தேர் செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் தேர் பணி முடிந்தும் வெள்ளோட்டம் நடைபெறவில்லை. மதுரை ஐகோர்ட் கிளையில் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதி வெள்ளோட்டம் நடத்த உத்தரவிட்டனர். இந்த ஆண்டு தேரோட்ட விழா ஜுலை மாதம் நடை பெற உள்ளது. அதற்குள் வெள்ளோட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளோட்டம் நடத்த முடிவு: இந்நிலையில் நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பால்துரை முன்னிலையில் உஞ்சனை, மெலசெம்பொன்மாரி, தென்னிலை, இறகுசேரி ஆகிய நான்கு நாட்டைச் சேர்ந்த இருதப்பினரிடையே ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. காலையில் ஒரு பிரிவினரும், மாலையில் மற்றொரு பிரிவினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கோவில் தேர் வெள்ளோட்டம் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நடத்துவதில் ஆட்சேபனை இல்லை எனவும் இரு தரப்பிலும் வெள்ளோட்டம் நடத்த சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளோட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஐகோர்ட்டில் தெரிவிக்கும். கூட்டத்தில் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின், சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோ, இந்து அறநிலையத்துறைஇணை ஆணையர் மற்றும் துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை , போலீஸ் அதிகாரிகள் தாலுகா வருவாய் துறையினர் பங்கேற்றனர்.