பதிவு செய்த நாள்
23
பிப்
2023
10:02
பல்லடம்: பல்லடம் அங்காளம்மன் கோவிலில், 48வது குண்டம் விழா, அம்மன் திருவீதி உலாவுடன் நிறைவடைந்தது.
பல்லடம், திருச்சி ரோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் இக்கோவிலில் குண்டம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 48வது குண்டம் விழா, பிப்., 17 அன்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. மறுநாள் கொடியேற்றம், யாகசாலை பூஜை மயான பூஜை உள்ளதால் நடந்தன. பிப்., 20 அன்று காலை, 7.00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று முன் தினம் கொடி இறக்குதல், மகா அபிஷேகம், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, இரவு, 8.00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், இதையடுத்து பேச்சியம்மன் பூஜை, வசந்த விழா நிகழ்வுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஸ்ரீஅங்காளம்மன் திருவீதி உலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலித்தார்.