பதிவு செய்த நாள்
25
பிப்
2023
03:02
தஞ்சாவூர்: கும்பகோணத்தில்,மாசிமக பெருவிழா வரும் மார்ச்.6ம் தேதி நடக்கிறது. இதற்காக ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஆறு சிவன் கோவில்களில் கொடியேற்றம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்னு மாசிமக பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மாசிமக விழாவில், சிவாலயங்கள் மற்றும் வைணவத் தலங்களில் கொடியேற்றி பத்துநாள் உற்சவம் நடைபெறும். இதையடுத்து, இன்று (25ம் தேதி) மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், காசிவிஸ்வநாதர் கோவில், காளகஸ்தீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில்களில் மாசி மக பத்து நாள் உற்சவ விழாவுக்கு கொடியேற்றம் நடந்தது. இதில், மகாமக பெருவிழாவிற்கு முதன்மையாக போற்றப்படும் ஆதிகும்பேஸ்வர் கோவிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க, கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து வரும் 28ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா, மார்ச் 1ம் தேதி தன்னைத்தான் பூஜித்தல் மற்றும் ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசிமக தீர்த்தவாரி வைபவம் வரும் மார்ச்.6ம் தேதி நடக்கிறது. அப்போது 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள், மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து 8ம் தேதி விடையாற்றி உற்சவமும், 9ம் தேதி பஞ்ச மூர்த்திகள் சுத்தாபிஷேக நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.