பதிவு செய்த நாள்
27
பிப்
2023
05:02
திருவொற்றியூர்: பழமை வாய்ந்த திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ திருவிழா, நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கொடியேற்றத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தொட்டியில், தியாக ராஜ சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரம், மஞ்சள், பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சாம்பிராணி துாபமிட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், 50 அடி உயர பிரமாண்ட கொடி மரத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், தியாகேசா ஒற்றீசா... என, விண்ணதிர முழங்கினர். கொடியேற்றத்திற்கு பின், தியாகராஜ சுவாமி, பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு மாடவீதி உலா வந்தார். பிரம்மோற்சவ திருவிழா நாட்களில், உற்சவ சந்திரசேகரர் - திரிபுர சுந்தரி தாயார் சூரிய, சந்திர பிரபை, சிம்மம், நாகம், பூதம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, இந்திர விமானம், யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம், 4ம் தேதியும்; கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், 6ம் தேதியும் நடைபெற உள்ளன. வரும், 7ம் தேதி, தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம்; 8ம் தேதி இரவு, தியாகராஜர் 18 திருநடனம், பந்தம் பறி உற்சவத்துடன், திருவிழா நிறைவு பெறும். சென்னை சுற்றுவட்டாரத்தில் அதிக மக்கள் கூடும் திருவிழா என்பதால், கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான ஊழியர்கள், விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.