பதிவு செய்த நாள்
02
மார்
2023
10:03
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மாசி பூக்குழி பெருந்திருவிழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்து அருவிக்குச் சென்று தீர்த்தமாடி வரும் நிலையில் அங்கு கரடு முரடான பாதை, தீர்த்தம் எடுக்கும் இடத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி உள்ளதால் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றாகும். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பூக்குழி பெருந்திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். இத்திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், குறிப்பாக பெண் பக்தர்கள் காப்புக் கட்டி 15 நாட்கள் விரதம் இருந்து அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, கரும்புத் தொட்டில், கழுகு மரம் ஏறுதல் என பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்துவர். 15 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் காப்பு கட்டி நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் நத்தம் அருகே உள்ள கரந்த மலைக்குச் சென்று அங்குள்ள இயற்கையாக ஓடும் கன்னிமார் அருவியில் புனித நீராடி, பின் அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்த பின் நத்தம் மாரியம்மன் கோவிலில் காப்புக் கட்டி விரதத்தை தொடங்குவர். கரந்தமலை அடிவாரம் வரை சாலை வசதி உள்ள நிலையில் பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் கரடு முரடான மலைப்பாதையில் பயணித்து தீர்த்தம் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.
இந்தாண்டு தற்போது வரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தற்போது வரை காப்பு கட்டி உள்ள நிலையில், இனிவரும் நாட்களிலும் காப்பு கட்டும் பக்தர்கள் எண்ணிக்கை தினசரி அதிகரித்துள்ளதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தாண்டும் காப்பு கட்ட உள்ளனர். சிறு வயது பக்தர்கள் முதல் சென்று வரும் கரந்தமலை மலைப்பாதையில் பல இடங்களில் பெரிய பாறைகள் மற்றும் கற்களும் அதிக அளவு உள்ளது. மேலும் அதிக அளவு பெண் பக்தர்கள் சென்று அருவியில் குளிக்கும் பகுதியில் பெண்கள் உடை மாற்றும் அறைகள் இன்றி உள்ளது. மேலும் அருவியில் தண்ணீர் தொடர்ந்து செல்வதால் பல இடங்களில் பாறைகள் வழுக்கும் பகுதிகளாக உள்ளதால் பக்தர்கள் சிலர் வழுக்கி விழுகின்றனர். எனவே இந்தப் பகுதிகளில் சிமெண்ட் காரைகள் மற்றும் பாதுகாப்பு கம்பிகள் அமைத்து தர வேண்டும். மேலும் பாதைகளில் இடையூறாக உள்ள கரடு முரடான பாறைகள் மற்றும் கற்களை அகற்ற வேண்டும்.
சோ.ஆனந்த கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர், பா.ஜ., ஐ.டி. பிரிவு, வேம்பார்பட்டி: நத்தம் மாரியம்மன் கோவில் பெருந்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வர கரந்தமலை செல்கின்றனர். இதில் அதிகம் பெண் பக்தர்கள் தான் சொல்கிறார்கள். இதில் தீர்த்தமாடும் பெண் பக்தர்களுக்கு உடைமாற்றும் தற்காலிக அறைகள் அமைத்து தர வேண்டும். அதேபோல் கரந்த மலைக்குச் செல்லும் கரடு முரடாக உள்ள பாதைகளையும் சீரமைத்து கொடுக்க வனத்துறையும், இந்து அறநிலைய துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.ராஜேந்திர பிரசாத், பா.ஜ., ஒன்றிய தலைவர், நத்தம்: மிகவும் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் ஆனது சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மாசி மாதம் 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து கலந்து கொள்வார்கள். மக்கள் கன்னிமார் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க செல்லும் பக்தர்கள் நத்தத்திலிருந்து போக்குவரத்து வசதி இல்லாமல் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் உலுப்பகுடியில் இருந்து கன்னிமார் கோவிலுக்கு செல்லும் பாதையானது தற்பொழுது மிகவும் சேதம்மடைந்து போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லாதது பக்தர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு பக்தர்களின் சிரமம் கருதி, தீர்த்தம் எடுத்து வர இலகுவாக தரமான சாலை அமைத்து தர வேண்டும்.
ரா. சுபாஷினி ராஜேந்திரன், சமூக ஆர்வலர், நத்தம்: நத்தம் கரந்தமலை கன்னிமார் கோவிலின் மேல்புறம், நீர் வழி தடத்தில் ஒரு பெரிய தடுப்பணை கட்டி நீரை சேமித்து வைக்கும் பட்சத்தில், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.கன்னிமார் கோவிலை மையமாக வைத்து சுற்றுலா ஸ்தலம் அமைத்து கொடுக்கும் பட்சத்தில் பக்தர்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு நிறைவேறும். குறிப்பாக பெண்கள் புனித நீராடும் கரந்தமலை பகுதியில் பெண்கள் உடை மாற்ற வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.