பதிவு செய்த நாள்
02
மார்
2023
10:03
திருவொற்றியூர்: பழமையான திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடக்கிறது.
திருவிழாவின் அனைத்து நாட்களிலும், அதிகாலையில் தியாகராஜ சுவாமி புறப்பாடு இருக்கும். குறிப்பாக, 3, 4, 5 ம ற்றும் 6ம் நாளில், தியாகராஜ சுவாமி, தேவர்களுக்கு அனுகிரகம் செய்தல் மற்றும் நாட்டு மக்களின் பாவம் மற்றும் குறைகளை நீக்கும் வகையில், கோவிலின் கிழக்கு முகப்பு வாயிலில் அமர்ந்த நிலையில், திருநடனம் புரிவார். அதன்படி, நேற்று அதிகாலை நான்காம் நாள் பவனியையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தொட்டியில், அமர்ந்த நிலையில் எழுந்தருளிய தியாகராஜ சுவாமி, மாடவீதிகளில் உலா வந்தார். பின், கோவிலின் கிழக்கு முகப்பு பகுதியான, சன்னிதி தெ ரு –அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி சன்னிதி சந்திப்பில், கயிலாய வாத்தியங்கள் முழங்க, சாம்பிராணி துாபமிட ஒய்யார திருநடனமாடினார். அப்போது, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் துாவப்பட்டன. இந்நிகழ்வை காண, அதிகாலையே பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.