திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம், 24ம் தேதி விநாயகர் வீதியுலா, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
மலைக்கோவில் தேர்வீதியில் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று இரவு 7:00 மணியளவில் உற்சவர் முருகர் மரத்தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தேர் மீது தானிய வகைகளை வீசி வழிபட்டனர். இன்று இரவு உற்சவர் முருகர் குதிரை வாகனத்தில் உலா வருகிறார். நள்ளிரவில் வள்ளித் திருமணம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கத்துடன் மாசி மாத பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.