பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நூறு ஆண்டுகால ஆளுயர பந்த சேவைக்கு சிறப்பு பூஜை நடந்தது.
காரமடை ரங்கநாதர் தேர் திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற, தண்ணீர் சேவை, பந்த சேவை எடுத்து ரங்கதாரை வழிபடுவது வழக்கம். நேற்று விழாவையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் வீட்டில் ஆளுயர பந்த சேவைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பந்த சேவை எடுத்து வரும் தெற்கு பாளையம் வெங்கடாசலம் குடும்பத்தினர் கூறுகையில்," ஐந்து தலைமுறைகளாக காரமடை ரங்கநாதர் தேர் திருவிழாவையொட்டி பந்தசேவை வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறோம். சுமார், 200 கிலோ எடையுள்ள ஆளுயர பந்த சேவையை ஆண்டுதோறும் காரமடை தேர் திருவிழாவின் தொடக்க நாளான கொடியேற்றம் அன்று சிறப்பு பூஜை நடத்தி, பந்த சேவையை கோவிலுக்கு எடுத்துச் செல்ல தயார்படுத்துவோம். தேரோட்டம் வரை தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருவோம். தேரோட்டம் அன்று முக்கிய பக்தர்களின் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்து மறுநாள் காரமடை ரங்கநாதர் கோவில் சென்று பூஜை செய்து வீடு திரும்புவோம். இதை கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்து வருகிறோம்" என்றார்.