பதிவு செய்த நாள்
11
மார்
2023
06:03
புதுச்சேரி: புதுச்சேரியில் 253 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரெஞ்ச் கப்புச்சின் (கப்ஸ்) ஆலயத்தில், வரலாற்றை அறிந்து கொள்ள அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், பிரெஞ்சு ஆட்சி காலத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம், சந்திரநாகூர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த பிரெஞ்சுக்கார்களுக்காக மட்டும் புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு ஒயிட் டவுன் ரோமன் ரோலண்ட்- சூர்கூப் வீதி சந்திப்பில், (தற்போது கல்லறை உள்ள பகுதி) 1707ஆம் ஆண்டு (கப்ஸ்) சம்மனசுகளின் ராக்கினி பிரெஞ்ச் (சர்ச்) கிறிஸ்தவ ஆலயம் முதல் முதலாக கட்டப்பட்டது. 35 ஆண்டுகள் இருந்த இந்த ஆலயம் நாளடைவில் இடிந்து போனது. அதன் பின், ரோமன் ரோலாண்ட் வீதியில், தற்போது குளூனி பள்ளி இயங்கும் இடத்தில், 1736 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1758 ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டது. அப்பொழுது தமிழகத்தை ஆண்ட பிரிட்டிஷாருக்கும், புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக பிரிட்டிஷாரால், 1761ஆம் ஆண்டு இந்த ஆலயம் முற்றிலுமாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, துய்மா வீதியில் குருமார்கள் தங்கியிருந்த துறவிகள் மடமும் முக்கால்வாசி பகுதி இடிக்கப்பட்டது.
அதன் பிறகு, மூன்றாவது ஆலயம் துய்மா- சூர்கூப் வீதி சந்திப்பில் அப்பொழுது பயன்பாட்டில் இருந்து வந்த கப்புச்சின் கிறிஸ்துவ பிரெஞ்ச் குருமார்கள் தங்கியிருந்த துறவிகள் மடத்தில் 1770 ஆண்டு கப்ஸ் ஆலயம் மணி கூண்டுடன் கட்டப்பட்டது. நாளடைவில் இந்த ஆலயமும் பாழடைந்ததால், இதன் எதிர்புறத்தில் தூய்மா வீதியில் 1855 ஆண்டு நான்காவது (கப்ஸ்) சம்மனசுகளின் ராக்கினி ஆலயம் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், நூறாண்டுகளுக்கு மேலாக பாழடைந்த நிலையில் இருந்து வந்த, ஹரிட்டேஜ் ஏ கிரேடு கட்டடமான கப்ஸ் மூன்றாம் ஆலயத்தை, புனரமைக்கும் பணியை தற்போது, 139 ஆவது பங்கு தந்தையாக உள்ள சிரில் சாந்து மேற்கொண்டார். அதையொட்டி பெல்ஜியத்தை சேர்ந்த கட்டடக்கலை நிபுணர் பீட்டர் கிளேஸ் அதன் பழமை மாறாமல் நான்காண்டுகளில் புதுப்பித்தார். தற்போது இந்த ஆலயத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் விதமாக இது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாதிரியார்கள் திருப்பலியில் பயன்படுத்திய ஏழு பைபிள்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், கிறிஸ்துவ சிலைகள், பல்வேறு ஆவணங்கள் மற்றும் 1725 ஆண்டு பயன்பாட்டில் இருந்த ஐநூறு கிலோக்கு மேல் எடை கொண்ட ஆலயமணி, 1936இல் செய்யப்பட்ட இரண்டு மணிகள் உட்பட மூன்று மணிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை, புதுச்சேரி பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், பிரெஞ்சு தூதர் பிரெஞ்சு தூதர் லீஸ் தல்போ பரே ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் பார்வையிட முன் அனுமதி பெற வேண்டும்.