அம்மன் மூக்குத்தி திருட்டு, அதிகாரிகள் அலட்சியம்: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2023 08:03
திருப்புவனம்: பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோயிலில் அம்மன் மூக்குத்தி திருடு போய் 10 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு ஏ.டி.கல் எனப்படும் மின்னும் கல் மற்றும் தங்கத்துடன் மூக்குத்தி செய்து அணிவித்து இருந்தனர். கடந்த மார்ச் 2ம் தேதி அதிகாலை 17 வயது சிறுவன் மூக்குத்தியை திருடிச்சென்றான், போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டு சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். அம்மன் மூக்குத்தி திருடு போன நாளில் இருந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இன்றுவரை கோயிலுக்கு நேரில் வந்து விசாரணை நடத்தவே இல்லை. திருடு போன மூக்குத்தியில் ஒன்று மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில் அம்மனுக்கு இதுவரை மூக்குத்தி அணிவிக்காமல் இருப்பது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. அம்மனுக்கு பரிகார பூஜை செய்து புது மூக்குத்தி அணிவிக்க உபயதாரர்கள் தயாராக உள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் வேதனையடைகின்றனர். வருமானத்திற்கு மட்டும் அம்மனை நினைப்பதாகவும், மற்ற விஷயங்களில் அலட்சிப்படுத்துவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோயில் கோபுரம் மற்றும் வளாகங்களில் உள்ள பல சிலைகள் சேதமடைந்து மூளியாக காட்சியளித்து வரும் நிலையில் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் சேலை உள்ளிட்டவற்றை வைத்து மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே அறநிலையத்துறையினர் அம்மனுக்கு உபயதாரர்கள் மூலம் புதிய மூக்குத்தி அணிவிக்க வேண்டும், சேதமடைந்த சிலைகளை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.