உடுப்பி: கர்நாடகா, உடுப்பி, கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் ரதோத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது.
கொல்லூர் மூகாம்பிகை கோவில் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது. இங்கு மாசி மகா தேர்த்திருவிழா வைபவம் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாகவும், மிகவும் விமரிசையாகவும் நடைபெறும். அன்னையின் புன்னகை பூத்துக்குலுங்கும் எழில் வதனமும், புவனத்தை ஈர்க்கும் வைர மூக்குத்தியும், அனைவரின் கவனத்தைக் கவரும் தங்கக் கிரீடமும், தாமரைத் திருவடிகளும், அருள் சுரக்கும் அழகிய நேத்திரங்களும், சிம்மத்திவ் மீதமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் மூகாம்பிகையின் திருக்கோலத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இத்தகைய சிறப்பு மிக்க ரதோத்ஸவம் நேற்று (15ம் தேதி) நடைபெற்றது. க்ஷேத்திர தந்திரி டாக்டர் ராமச்சந்திர அடிகா தலைமையில் நடைபெற்ற விழாவில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.