பதிவு செய்த நாள்
17
செப்
2012
10:09
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக, கோவிலின் பிரதான கோபுரம், வெள்ளி வாசல், மாட வீதிகளில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் முக்கிய விழாவான, ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழா நாளை, 18ம் தேதி துவங்கி, வரும், 26ம் தேதி வரை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறியதாவது: திருமலை வரும் பக்தர்கள் தங்க விடுதி வசதி, முடி காணிக்கைக்கு நீண்ட நேரம் நிற்காமல், அரை மணி நேரத்தில் முடிக்க, கூடுதல் சவர ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவர். தெப்பக்குளம் உட்பட, அனைத்து தங்கும் விடுதிகளுக்கும், முழு நேரமும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் போது, தாங்கள் எடுத்து வரும், பைகள், மொபைல் போன், கேமரா உள்ளிட்ட பொருட்களை, பத்திரமாக வைக்க, பழைய அன்னதான சத்திர வளாகத்தில், அனைத்து வசதிகளுடன் மைய அலுவலகம் அமைக்க, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.லட்டு பிரசாதங்கள் வழங்க கூடுதல் கவுன்டர்கள் திறக்க மற்றும் அங்கிருந்து நேரடியாக ஆர்.டி.சி., பஸ் நிலையம் செல்ல பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். திருமலையில் விடுதிகளை கட்டி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியவர்கள் மீண்டும் அதை சொந்தம் கொண்டாட உரிமையில்லை.அந்த விடுதிகளுக்குத் தேவையான வசதிகளை செய்ய, அவர்களை நாடுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிரம்மோற்சவ விழாவில், திருமலை மாடவீதியில் வாகன சேவை உற்சவத்தின் போது, பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு எவ்வித குறைபாடும் ஏற்படாதவாறு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருமலை கோவிலின் பிரதான கோபுரம், வெள்ளி வாசல், ஆனந்த விமான தங்ககோபுரம், மாட வீதிகள் மற்றும் திருமலையில் காணும் இடங்கள் எங்கும் வண்ண விளக்குகள் மற்றும் சுவாமி, தாயார் உருவம் பொறித்த, கட்-அவுட் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.