பதிவு செய்த நாள்
17
செப்
2012
10:09
சென்னை: முயற்சியும், பகவானின் கிருபை இருந்தால் மட்டுமே நினைத்ததை அடைய முடியும், என, சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதீ தீர்த்த சுவாமிகள் கூறினார். ஸ்ரீ பாரதீ தீர்த்தா டிரஸ்ட் சார்பில், மாநில அளவில், 10ம் வகுப்பு, பிளஸ் டூ பொது தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, மயிலாப்பூர், "சுதர்மா இல்லத்தில் நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்கராச்சாரியார் கூறியதாவது: வாழ்வில் மனிதன் தனக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும், கெட்டது நடக்க கூடாது என எண்ணுகிறான். இந்த விருப்பங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றால், நம் முயற்சியால் மட்டும் எல்லாவற்றையும் அடைய முடியாது. நாம் முயற்சி செய்யாமல், பகவன் கிருபை மட்டும் இருந்தால் போதும் என நினைத்தாலும் நடக்காது. முயற்சியும், பகவானின் கிருபையும் இருந்தால் மட்டுமே நினைத்தை அடைய முடியும். மனம், உடல், வாழ்க்கை என மூன்று நிலையில் மனிதன் பிறருக்கு பாவம் செய்கிறான். பிறருக்கு துன்பம் தருதல், பிறர் பொருளை அபகரிக்க நினைத்தல், பகவான் மீது விசுவாசம் இல்லாமல் இருத்தல் என மனதால் பாவம் செய்கிறான். இந்த பாவங்கள் எல்லாம் நீங்க, பகவானின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். பகவான் நாமம் சொல்லும்போதும், விசுவாசத்தோடும், சிரத்தையோடும் சொல்ல வேண்டும். இல்லையெனில் பலன் இருக்காது. பகவான் மீது பக்தியும், தர்மம் செய்யும் எண்ணமும் எல்லோரிடமும் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.