சதுரகிரியில் பங்குனி அமாவாசை வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2023 12:03
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலைஅடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2:00 மணி வரை 7 ஆயிரம் பக்தர்கள் மலை ஏறியதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் பெய்த சாரல் மழையினால் ஓடைகளில் லேசான நீர்வரத்து காணப்பட்டது. காலையில் மலையேறும் போது இதமான சூழல் இருந்த நிலையில் தரிசனம் முடித்து, காலை 11:00 மணிக்கு மேல் அடிவாரம் திரும்பியவர்கள் கொளுத்தும் வெயிலில் மிகவும் சிரமத்துடன் திரும்பினர். மதியம் 12:00 மணிக்குமேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூசாரிகள் அமாவாசை வழிபாடு பூஜைகளை செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.