பதிவு செய்த நாள்
23
மார்
2023
03:03
பல்லடம்: பல்லடம் அருகே, 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆஞ்சநேயர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாதப்பூர் அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள புதருக்குள் இருந்து, பழமையான கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, பிருந்தாவன அனுமந்தராயர் கோவில் என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், போதிய பராமரிப்புகள் இல்லாமல் காலப்போக்கில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அறநிலையத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால், தற்போது, கோவில் கண்டெடுக்கப்பட்டு மீட்கும் பணி நடந்து வருகிறது. பழமையான இக்கோவில் கருவறைக்குள், சுமார், 3 அடி உயரத்தில் அனுமந்தராயராக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அருகிலேயே, ஆஞ்சநேயர், நரசிம்மர், ஸ்ரீராமர், வாமனர் மற்றும் நாகர் என, பல்வேறு தெய்வங்களுடனான கல்வெட்டுக்களும் உள்ளன. பிருந்தாவன வடிவில் இக்கல்வெட்டு இருப்பதும் கூடுதல் சிறப்பாகும். மேலும் பல கல்வெட்டுகளில், பல்வேறு எழுத்துக்களும் உள்ளதால், மீட்கப்பட்ட இக்கோவில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
அப்பகுதியினர் கூறுகையில், ஒரு காலத்தில் இப்பகுதியில் அக்ரஹாரம் இருந்ததாகவும், இதனால், இங்குள்ள வீதி பார்ப்பனர் வீதி என்றும் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சீமை கருவேல மரங்கள் நிறைந்த முட்புதருக்குள் இருந்த ஆஞ்சநேயர் கோயில், 500 உங்களுக்கு மேல் பழவை வாய்ந்தது. கோவில் குறித்த வரலாறுகள் இல்லை. ஆனால், பல்லடம் - திருச்சி ரோட்டில், 20 ஏக்கருக்கு மேல் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது என்றனர். மீட்கப்பட்ட பழமையான ஆஞ்சநேயர் கோவிலை தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சித் தலைவர் அசோக்குமார் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.