பதிவு செய்த நாள்
23
மார்
2023
03:03
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், 2023 - -24ம் ஆண்டுக்கான பட்ஜெட் 4,411 கோடி ரூபாயில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இது பற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், வரும் 2023- - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒப்புதலுடன் சில நிர்வாக முடிவுகளும் எடுக்கப்பட்டன. வி.ஐ.பி., பிரேக் தரிசன நேரம் மாற்றத்தால் சாதாரண பக்தர்கள் மிகவும் பயனடைந்துள்ளனர். எனவே, இதே செயல்முறையை தொடர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது.
முக்கியத்துவம் கொரோனா பரவலுக்கு முன், உண்டியல் வருவாய் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது வருவாய் 1,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கொரோன பரவல் காலத்தில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, வெர்ச்சுவல் சேவை எனப்படும் இணைய வழி சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதன் வாயிலாக பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தபடியே ஏழுமலையான் சேவையில் பங்கேற்று வந்தனர். கொரோனா தொற்று ஓய்ந்த பின்னும், பக்தர்களின் விருப்பப்படி இந்த சேவைகளை தேவஸ்தானம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கோடை காலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வி.ஐ.பி., பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் தரிசன அனுமதி குறைக்கப்பட உள்ளது. மேலும், ஸ்ரீவாணி டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் குறைத்து, பொது தரிசனத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது.10 லட்டுகள்திருமலையில் உள்ள லட்டு வளாகத்தில் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக, 30 லட்டு கவுன்டர்கள் கட்ட 5.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உளுந்துார் பேட்டையில் பக்தரின் நன்கொடையில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோவிலில், 4.70 கோடி ரூபாயில் சில மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீநிவாசா மேன் பவர் கார்ப்பரேஷனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தரிசனம் மற்றும் சலுகை அடிப்படையில் மாதம் 20 ரூபாய் வீதம் 10 லட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.