பதிவு செய்த நாள்
25
மார்
2023
05:03
சென்னை-கோவில் நிலங்களை அறநிலையத் துறையே ஆக்கிரமித்திருப்பதாக கூறப்படும் புகார் குறித்து பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில்களின் நிதியில் கல்லுாரிகள் துவங்குவதை எதிர்த்தும், கோவில் நிதியை தவறாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆலய வழிபடுவோர்சங்கத் தலைவர், டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவு விபரங்களை கேட்டு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்துார் முருகன், திருவானைக்காவல் கோவில்களின் நிலங்களில், அறநிலையத் துறை மண்டல இணை கமிஷனர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. அதற்கு வாடகை தருவதில்லை. கோவில் நிலங்களை அறநிலையத் துறையே ஆக்கிரமித்துள்ளது என, மனுதாரர் தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரரின் புகார் குறித்து, அறநிலையத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.