பதிவு செய்த நாள்
27
மார்
2023
04:03
பரமக்குடி: பரமக்குடி வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை சுந்தரராஜ பெருமாள், கருப்பணசாமி, பால ஆஞ்சநேயர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு பாத்தியான இக்கோயிலில் மார்ச் 24 அன்று வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. மறுநாள் காலை 7:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து தீர்த்தங்கள் எடுக்கப்பட்டு யாக சாலையை அடைந்தது. தொடர்ந்து காலை, மாலை இரண்டு கால யாக பூஜைகளும், மார்ச் 26 ல் 3 மற்றும் 4 ம் காலையாக பூஜைகள் நடந்தன. இன்று காலை 7:00 மணிக்கு, 5 ம் காலயாக பூஜைகள் துவங்கி, 9:15 க்கு மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் பட்டாச்சாரியார்கள் தீர்த்த குடங்களை சுமந்து விமான கலசங்களை அடைந்தனர். தொடர்ந்து 10:05 மணிக்கு வானத்தில் கருட பகவான் வட்டமிட, கோவிந்தா கோஷம் முழங்க கோலாகலமாக மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று நாட்களும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் துடுகுச்சிநாகநாதன், பாலமுருகன், நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.