தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 04:03
தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குவதையடுத்து கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா நாளை 29ம் தேதி இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ந் தேதியும்,மின் அலங்கார தேர்பவனி 6 ந் தேதி இரவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் பங்குனி மாதம் துவங்கியதிலிருந்து பக்தர்களின் வருகை அதிகரிக்க துவங்கியதால் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள்,கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.