நத்தம், நத்தம் அருகே சிறுகுடியில் மந்தை முத்தாலம்மான் கோவில் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது.
முதல்நாள் இரவு வானவேடிக்கைகளுடன் சப்பரத்தில் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு கிழக்கு தெருவை சேர்ந்த பெண்கள் ஊர்வலமாக ஆரத்தி எடுத்து வந்து வழிபட்டனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு அம்மன் நகர்வலமாக சென்றது. பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.விழாவில் ஆரத்தி, கரும்பு தொட்டில் எடுத்தல், மாவிளக்கு ,கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் நேற்று மாலையில் மேளதாளம் முழங்க ஊர் பொதுமக்கள் ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலவாணி வீரராகவன், துணைத் தலைவர் செல்வம், ஊராட்சி செயலாளர் வீரபாண்டி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.