திருப்பரங்குன்றத்தில் ஆறு சக்கரங்களுடன் இந்த ஆண்டு முதல் தேர் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2023 05:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான பெரிய வைரத்தேர் இந்த ஆண்டுமுதல் ஆறு இரும்பு சக்கரங்களுடன் பவனி வர உள்ளது.
கோயில்முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைர தேர் 40 டன் எடை கொண்டது. பங்குனி திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி. தெய்வானைக்கு திருக்கல்யாணம் முடிந்து மறுநாள் அத்தேரில் எழுந்தருள்வர். கிராமத்தினர், பொதுமக்கள், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் கிரிவலப் பாதையில் வலம் வரும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இத்தேர் வலம்வரும். முன்பு அத்தேரின் அடிப்பகுதியில் வெளிப்புறத்தில் 4 மர சக்கரங்களும் உள்பகுதியில் 2 மரசக்கரங்களும் பொறுத்தப்பட்டிருந்தது. அம்மரசக்கரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டதால் தேர் வலம் வருவதில் தடைகள் ஏற்பட்டது. தென்பரங்குன்றத்தில் கிரிவல ரோட்டை ஒட்டியுள்ள வயல்களில் தேர் சக்கரங்கள் இறங்கி இரண்டு நாட்களுக்கு பின்பு ஊர் கூடி இழுத்து நிலையில் நிறுத்தப்பட்டதும் உண்டு. இதனால் 1990ல் தேரில் இருந்த மரச் சக்கரங்களுக்கு பதிலாக வெளிப்பகுதியில் தலா ஒன்னரை டன் எடை கொண்ட 4 மெகா இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டது .அதுமுதல் தேர் சீராக கிரிவலப் பாதையை வலம் வந்து கொண்டிருக்கிறது. தேரின் பாதுகாப்பு கருதி தேரின் உள்பகுதியில் இரண்டு இரும்பு சக்கரங்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது அதன்படி தேரின் உள்பகுதியில் ரூ.மூன்றரை லட்சத்தில் மூன்று டன் எடை கொண்ட இரண்டு சிறிய இரும்பு சக்கரங்கள் கடந்த ஆண்டு தேரோட்டம் முடிந்த பின்பு பொருத்தப்பட்டது. இந்த ஆண்டு பங்குனி தேரோட்டம் ஏப். 10ல் நடக்கிறது. அன்று ஆறு சக்கரங்களுடன் தேர் கிரிவலப் பாதையில் பவனி வர உள்ளது.
தேரில் சேதமடைந்த குதிரை பொம்மை: தேரில் ஏராளமான சுவாமி சிலைகள், குதிரை உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் பொறுத்தப்பட்டுள்ளது. அதில் முன்பகுதியில் உள்ள ஒரு குதிரை பொம்மை சேதமடைந்துள்ளது. அதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை தேவை.