பதிவு செய்த நாள்
20
செப்
2012
11:09
திருச்சி மலைக்கோட்டை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு, தலா, 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டைகள் நைவேத்தியம் செய்யப்பட்டது. பாலகணபதி அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 14ம் தேதி வரை நடக்கும் சதுர்த்தி விழாவில், பல்வேறு அலங்காரங்களில் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை, கோவில் இணை கமிஷனர் இளம்பரிதி, உதவி கமிஷனர் ஜெயப்பிரியா மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர். பிள்ளையார்பட்டி: சிவகங்கை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், காலை 9:25 மணிக்கு, தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர், சண்டிகேசுவரர், அங்குசத் தேவர் ஆகியோர், கோவில் குளத்தில் எழுந்தருளினர். வேக வைத்த, "மெகா சைஸ் கொழுக்கட்டை, பகல், 1:50 மணிக்கு, மூலவருக்கு படைக்கப்பட்டது.
பொள்ளாச்சியில்...: பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் உள்ளது, பால ஸ்வர்ண கணபதி கோவில். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகருக்கு நேற்று சிறப்பு அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின், 15 கிலோ எடை கொண்ட, "மெகா லட்டு, நைவேத்தியமாக படைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்திக்காக 25 கிலோ லட்டு படையல்
புதுச்சேரி : புட்லாய் அம்மன் ஆலயத்திலுள்ள பால விநாயகருக்கு, 25 கிலோ எடையுள்ள லட்டு படையலிடப்பட்டது.புதுச்சேரி, காமராஜர் சாலை, ராஜய்யர் தோட்டத்தில் அமைந்துள்ள புட்லாய் அம்மன் ஆலயத்தில், பால விநாயகருக்கு நான்காம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை நடந்தது. விழாவில் 25 கிலோ எடையுள்ள லட்டு, படையலிடப்பட்டது.முன்னதாக, பால விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. படையலிடப்பட்ட லட்டு, மாலையில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விநாயகர் சதுர்த்தி: கோவில்களில் வழிபாடு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியிலுள்ள கோவில்களில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
அம்பராம்பாளையம் பிரசண்ட விநாயகர் கோவிலில், காலை 6.00 மணிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, அருகம்புல் பொடி,நெல்லி பொடி, பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்கள் கொண்டு ÷ஷாடச அபிஷேகமும், 108 இளநீர் மகா அபிஷேகமும் நடந்தது. காலை 9.00 மணிக்கு ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு தீபாராதனை நடந்தது. விழாவில், கோவில் தக்கார் ஜெயசெல்வம், விழா குழுவினர் இளங்கோ, ஆனந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விநாயகர் சதுர்த்தி பூஜை துவங்கியது. காலை 9.00 மணிக்கு பூர்ணாஹுதி, 10.00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு விநாயகருக்கு சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது. அதன்பின், அலங்கார பூஜையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த விழாவில், விநாயகருக்கு காலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. காலை 7.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மகாலிங்கபுரம் நவசக்தி விநாயகர் கோவிலில் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் காலை 8.00 மணிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தேர்நிலை விநாயகர் கோவில் வீதியில் உள்ள ஞானசக்தி விநாயகர், வெள்ளி கவசத்திலான சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பணிக்கம்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், காலை 8.00 மணிக்கு மகா அபிஷேகமும், பகல் 12.00 மணிக்கு அன்னதானமும் நடந்தது.
மகாலிங்கபுரம் மங்கள விநாயகர் கோவிலில், காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 10.00 மணிக்கு அபிஷேகமும், காலை 11.00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாரியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடும், பூஜையும் நடந்தன.
சதுர்த்தி விழா: தங்க கவசத்தில் அருள் பாலித்த விநாயகர்
கரூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி சின்ன ஆண்டாங்கோவில் கற்பக விநாயகர், தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்துக்களின் முக்கிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கரூரில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில், நேற்று காலை, 6 மணிக்கு மூர்த்தி ஹோமங்கள் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 8 மணிக்கு, விநாயகருக்கு தங்க கவசம், பொருத்தப்பட்டு, மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ராஜூ தலைமையில், நிர்வாகிகள் செய்திருந்தனர்.கருப்பன்கவுண்டன்புதூரில், ஆர்.கே., நிட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும், 50க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், விநாயகர் சிலை வைத்து, சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். கரூர் பண்டரிநாதன் கோவிலில் விநாயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏழு அடி கொண்ட சிங்க வாகன விநாயகர் சிலைக்கு, மஹா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியை சேர்ந்த மேலை பழனியப்பன் உள்பட பலர் செய்திருந்தனர்.மேலும், கரூர், தாந்தோணி, பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில், பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
கவுரி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
சிவகங்கை: சிவகங்கை, கவுரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு சதுர்த்தியை முன்னிட்டு, கோவிலில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து 108 சங்காபிஷேகம், கணபதி ஹோமம் நடந்தது. காலை 9.30 மணிக்கு, பூர்ணாகுதி, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு, கவுரி விநாயகர் திருவீதி உலா நடந்தது. கோவில் அர்ச்சகர் பிச்சை, சிறப்பு பூஜைகளை செய்தார். செயல் அலுவலர் ராமேஸ்வரி ஏற்பாட்டை செய்தார். நகரில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும், சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முக்கிய இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.